Category: Tamil (தமிழ்)

ஒளிரும் காளான்கள்

ஒளிரும் காளான்கள்

பள்ளிப் பருவத்தில் என் வீட்டுக் கடிகாரத்தின் எண்களும் முட்களும் இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டின் சாமி மாடத்தில் வேளாங்கண்ணி மாதாவின் சிறிய இளம்பச்சை நிற விக்கிரகம் இருக்கும். இரவில் மாதா ஒளிர்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். பிற்காலத்தில் உயிரில்லாத இப்பொருட்கள் ஒளிர்வதற்கான காரணம் ரேடியம் (radium) என்ற வேதியியல் தனிமம் எனவும், அதைக் கண்டுபிடித்த மேரி க்யூரி – பியர் க்யூரி தம்பதியரைப் பற்றியும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.

சிறு வயதில் கோடை விடுமுறையில் கிராமத்துக்குப் போனபோது, இரவு நேரங்களில் பச்சை நிறத்தில் மினுக்மினுக் என விட்டுவிட்டு எரிந்துகொண்டே மெல்லப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளைக் கண்டு வாய் பிளந்து பார்த்து வியந்திருக்கிறேன். இளஞ்சிவப்பிலும் இளம் பச்சையிலும் ஒளி வீசிக்கொண்டு தரையில் ஊர்ந்து செல்லும் செவ்வட்டை (glowworm) பூச்சியைக் கண்டு கண்கள் அகல விரியப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இந்த ஒளி உமிழும் நிகழ்வு, உயிர்ஒளிர்வு (bioluminescence) எனவும் அதற்கான காரணி லூசிபெரேஸ் (luciferase) எனும் நொதியே (enzyme) என்பதையும் கல்லூரியில் படித்திருக்கிறேன்.

இந்த ஒளிரும் தன்மை காளான்களுக்கும் உண்டு. உலகில் சுமார் 71 வகையான காளான்கள் இப்படி ஒளி உமிழும் தன்மையைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காளான்களின் வித்துகள் (spores) ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும் ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காகவே இத்தகைய ஒளி உமிழும் தன்மையை இவை பெற்றிருக்கின்றன. இத்தன்மையை இவை எப்படிப் பெறுகின்றன? இவ்வகையான காளான்களின் திசுக்களில் உள்ள லூசிபெரேஸ் எனும் நொதியானது லூசிபெரின் எனும் கரிம மூலக்கூறில் ஆக்ஸிகரணத்தை (oxidation) ஊக்குவிக்கிறது. அப்போது, வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் பச்சை ஒளியாக வெளியேறுகிறது. இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிரவைக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் தென்படும் பூஞ்சைகளையும் காளான்களையும் ஆவணப்படுத்தி சிறு நூல் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் எனது சக ஊழியர்களான ரஞ்ஜனி, திவ்யா, சங்கர் ராமன் ஆகியோருடன் ஈடுபட்டிருந்தேன். அந்நூலுக்காகக் காளான்களை எங்கு பார்த்தாலும் பல கோணங்களில் படமெடுத்துக்கொண்டிருந்தேன். அவற்றில் சில வகைக் காளான்கள் இரவில் ஒளிரும் தன்மையைக் கொண்டவை என்பதைப் படித்து அறிந்திருந்தேன். ஆனால் பார்த்ததில்லை. (அந்த நூலை இங்கே இலவசமாக பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்).

அண்மையில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் களப்பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில், சாலையோரமாக வீழ்ந்து கிடந்த மரத்தில் கொத்தாக முளைத்திருந்த காளான்களைக் கண்டதும் உடனே வண்டியை நிறுத்தினேன். அருகில் சென்று பார்த்தபோது அது இரவில் ஒளிரும் காளான் வகை எனத் தெரிந்தது. அப்போதே இரவானதும் அக்காளானை வந்து பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். வாகனப் போக்குவரத்து இல்லாத நடு இரவில் சக ஊழியர்கள் சிலருடன் அந்த இடத்தை அடைந்தேன். காளான் இருக்கும் இடத்துக்குச் சற்று முன்பே வண்டியை நிறுத்தி அதனருகே நடந்து சென்றேன்.

இரவில் பார்க்கக் கண்களை பழக்கப்படுத்திக்கொள்வதற்காக டார்ச் இல்லாமலேயே அதனருகில் சென்று பார்த்தேன். அந்த இடத்தில் மேகத்தால் மறைக்கப்பட்ட பிறை நிலவின் மெல்லிய ஒளி வீசியது. இருட்டில் ஒளிர்வதற்கான எந்த வித அறிகுறியும் இல்லாததைக் கண்டு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. காளான்கள் வீசும் ஒளி கும்மிருட்டில்தான் நம் கண்களுக்குப் புலப்படும் என்பதை உணர்ந்து மழைக்காக எடுத்துவந்த குடையைப் பிடித்து அதனுள் இருந்த குடைக்காளான்களைக் கண்டேன். அந்தக் கும்மிருட்டில் அவை மெல்லிய இளம்பச்சை நிற ஒளியை உமிழ்வதைக் கண்டு எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. எதிர்பார்த்து வந்தது நிறைவேறியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. இயற்கையின் எண்ணிலடங்கா அற்புதங்களில் ஒளி உமிழும் காளானும் ஒன்று. அதைப் பார்த்தது என் வாழ்வின் மறக்க முடியாத அற்புதங்களில் ஒன்று!

ஒளிரும் காளான்கள். படம் : கல்யாண் வர்மா
ஒளிரும் காளான்கள். படம் : கல்யாண் வர்மா

தி ஹிந்து தமிழ்  தினசரியில் 23 செப்டம்பர் 2013 அன்று வெளியான கட்டுரை. இதற்கான உரலி இதோ.

Books on birds in Tamil

Books on birds in Tamil

Birds have fascinated human beings since early times. There have been many books, notes, and descriptions of birds and their behaviour in world literature, including several Indian languages. Birds have a special place in classical Tamil literature. Names given to some birds in ancient Sangam Tamil literature are still the same and in use (e.g., Koogai – Barn Owl and Thookanang Kuruvi – Weaver Bird). The famous old Tamil verse on White Stork, ‘Narai Narai Sengal Narai’, gives us a glimpse of the observation skill of the poet Sathi Mutha Pulavar on the migratory behaviour of this bird. Birds are mentioned even in Tamil film songs. For instance, I have made a list of twenty songs mentioning Chittu kuruvi or House Sparrow. Although there are mentions of various birds in old Tamil literature, proverbs, contemporary poems and film songs, and birds are also depicted in temple murals and other paintings, there are as yet few popular science books and field guides on birds in Tamil.

In recent times, efforts to popularise birds and their behaviour in Tamil were pioneered by the famous naturalist M. Krishnan. He wrote about birds and other wildlife of India in various Tamil magazines and newspapers. In 2002, Krishnan’s writings in Tamil were compiled by Theodore Baskaran, another accomplished nature writer in Tamil in the book Mazhaikalamum Kuyilosaiyum (The Monsoon and the Call of the Koel). M. Krishnan also wrote about birds for the Tamil Encyclopaedia Kalaikalangiyam, published in ten volumes between from 1954 to 1968 by the Tamil Valarchi Kazagam. These articles on birds have been compiled and brought out in the book Paravaigalum Vedanthangalum (Birds and Vedanthangal) by Tamil writer Perumal Murugan (read his foreword for this book here). This collection includes M. Krishnan’s booklet on Vedanthangal Bird Sanctuary, which was published in 1961 by the Tamil Nadu Forest Department, an English version of which is available here.

Among the significant works on birds to emerge in Tamil after M. Krishnan, is the book “Theninthiyap Paravaigal” (South Indian Birds) authored by Dr. K. Ratnam, a retired Tamil professor. Published in 1974 by the Tamilnattu Padanool Niruvanam (Tamil Nadu Textbook Corporation), this book was part of school and college curriculum for a while, but is now out of print. After this Ratnam also produced another important publication Tamizil Paravai Peyargal (Bird names in Tamil) in 1998. In this amazing work, he compiled Tamil names of 410 bird species, referring to various books and sources including M. A. Badshah’s Checklist of birds of Tamil Nadu with English, scientific and Tamil names. Ratnam coined new names for species that did not have common names. This book, which I clearly remember buying in 1995 at the the 8th World Tamil Conference book fair at Thanjavur, is one of my prized possessions. It is now available online for free download. Still, Ratnam’s landmark book came a few years later. Published in 2002, Tamilnattu Paravaigal (Birds of Tamil Nadu) became the first field guide for birds in Tamil, covering 328 birds species that occur in Tamil Nadu.

Bird books in Tamil by Dr. K. Ratnam

Other nature writers in Tamil, including S. Mohamed Ali, Theodore Baskaran, Athi Valliappan, and Kovai Sadasivam, have published several articles and books on birds. Another acclaimed work on birds in Tamil is by Asai, a modern Tamil poet who is a writer and editor of Cre-A publications. Asai’s Kondalathi (Tamil name for Eurasian Hoopoe), a collection of his poems about birds, is a pioneering work in modern Tamil poetry.

Kondalathi, Tamil poetry on birds by Asai, and Paravaigalum Vedanthangalum, a collection of M.Krishnan’s articles on birds in Tamil.

Cre-A Publications is one of the highly reputed publishing houses of South India. Apart from the well known Kriyāviṉ taṟkālat Tamiḻ Akarāti (Tamiḻ-Tamiḻ-āṅkilam): Cre-A Dictionary of Contemporary Tamil (Tamil-Tamil-English), Cre-A has published an impressive array of Tamil literary works and translations from other languages. Cre-A’s co-founder and managing editor, Cre-A S. Ramakrishnan, has also pioneered the publishing of books on nature and environment, such as Inthiavin Sutruchulal (1986), a  translation of The State of India’s Environment, Maram Valarpu (Tree Planting), and the famous Spiders: An Introduction by K. Vijayalakshmi and Preston Ahimaz.

I was pleasantly surprised therefore when Asai approached me with his idea of bringing out a dictionary of birds in Tamil to be published by Cre-A. He had made an initial draft of the manuscript with about 50 species of birds, taking help from Dr. R. Bhanumathi, an environment educationist experienced in the art of puppetry. The initial list was extracted from Cre-A’s Tamil Dictionary. Over the next few months, we worked together on developing this and decided to bring it out as a photographic field guide.

Paravaigal: Arimugak kaiyedu (Birds: Introductory field guide)

The result is Paravaigal: Arimugak kaiyedu (Birds: Introductory field guide) released in January 2013 at the 36th Chennai Book Fair. This compact (10.5 cm X 14 cm) guide contains photographs and brief accounts of 88 bird species commonly found in Tamil Nadu. The selected species are mostly those commonly seen in the plains and a few from hilly and coastal regions. The books carries 166 full-colour photographs of these birds taken in the field by famous wildlife photographers such as Ramki Sreenivasan, Radha Rangarajan, Kalyan Varma, Gnanaskandan, Vijay Ramanathan, and many others. To aid in bird identification, photographs taken in different angles to clearly show plumage and posture of the bird are used in the book. Wherever necessary, differences between the sexes, plumage variation during breeding and non-breeding seasons, and different morphs of the same species, are also illustrated through photographs. Descriptions to help birders identify birds in the field are given in simple language. Tamil names of birds sometimes differ from region to region and we mainly use the names given by K. Ratnam, while mentioning any alternative common names. For each species, brief descriptions of habitat, ecology, and behaviour are given. Here are a couple of sample pages from this guide:

This guide is produced for anyone who are fascinated by birds and want to learn about birds. Besides the species accounts and photographs, there is a detailed introduction to the classification, nomenclature, and history of Indian ornithology. The book also lists various Indian research institutions, including those that offer courses on ornithology. To help birdwatchers who wish to know more, there is also a list of other field guides on Indian birds, tips on  birdwatching and bird identification using calls, plumage and nests. There are brief sections on bird migration, conservation, importance of birds, list of bird sanctuaries and links to Important Bird Areas (IBA’s) in Tamil Nadu and other books on birds in Tamil.

This book is a collective effort of many people. I take this opportunity to thank Mr. Athi Valliappan and Mr. Theodore Baskaran for their comments on the draft, all the photographers who generously contributed their wonderful photographs, Mr. Balaji for designing this book attractively, other staff of Cre-A for their help in various ways, and Divya and Sridhar for their encouragement. This book was a brainchild of Cre-A and I thank Mr. S. Ramakrishnan and Mr. Asai for giving me this opportunity.

To buy this book contact Cre-A. Email: creapublishers@gmail.com (Tel: 044 – 42020283)

ஒரு மழைக்காட்டு விதையின் பயணம்

ஒரு மழைக்காட்டு விதையின் பயணம்

காட்டுப்பாதையெங்கும் சிதறி கிடங்கின்றன விதைகள். கிருஷ்ணா மெல்லக் குனிந்து அவற்றை எடுத்து தான் கொண்டுவந்த பையில் சேகரித்துக்கொண்டிருக்கிறான். கிருஷ்ணாவிற்குத் தெரியும் இவை சாதாரண விதைகள் அல்ல என்று. இனி வரும் காலங்களில் வளர்ந்து பெரிய மரமாகி சிங்கவால் குரங்கிற்கும், பலவிதமான பழம் உண்ணும் பறவைகளுக்கு உணவளிக்கும், பெரிய இருவாசியும் (Great Hornbill),  பறக்கும் அணிலுக்கும், மலையணிலுக்கும் கூடமைக்க இடம் கொடுக்கும், யானைகூட்டத்திற்கு நிழலளிக்கும்…

விதைகள் சேகரிப்பு

சாலையோரத்தில் இருந்த ஒரு காட்டுக்கொடியில் பழம் பழுத்திருந்தது. அதன் கீழே அப்பழத்தின் விதையைக் கொண்ட எச்சம் சாய்ந்து கிடந்த மரத்தின் மீது கிருஷ்ணா பார்த்தான். அந்த எச்சத்தைப் பார்த்த உடனே அது பழுப்பு மரநாயினுடையது என்பதை அவன் கண்டுகொண்டான். அக்காட்டுக்கொடியின் (Liana) தண்டு மென்மையானது அல்ல, அது ஒரு சிறிய மரத்தின் அளவிலும், மிக உறுதியானதாகவும் இருந்தது. இவை காட்டுமரங்களின் மேல் பின்னிப்பினைந்து பழுப்பு மரநாயும், சிங்கவால் குரங்குகளும் தரையின் கீழ் இறங்காமலேயே இக்கொடிகளைப் பற்றி மரம் விட்டு மரம் செல்ல உதவிசெய்யும். அதற்கு கைமாறாக இவ்விலங்குகள் இக்காட்டுகொடியின் பழத்தை உண்டு தமது எச்சத்தின் வழியாக அவற்றின் விதையை வெவ்வேறு இடங்களுக்கு பரப்பும்.

கிருஷ்ணா அந்த காட்டுக்கொடியின் விதையையும், பலவிதமான மரவிதைகளையும் ஒரு பையின் சேகரித்து அருகில் இருந்த நாற்றுப்பண்ணைக்கு வந்தான். சேகரித்த விதைகளை ஒவ்வொன்றாக மண் நிரம்பிய பைகளில் நட்டு வைத்தான். ஏற்கனவே நட்டு வைத்த பலவிதமான மரவிதைகளில் சில முளைவிட ஆரம்பித்திருந்தன. மூன்று வருடத்திற்குமுன் நடப்பட்ட விதைகள் கிட்டத்தட்ட 2-3 அடி உயரத்திற்கு வளர்ந்திருந்தது. இம்மர நாற்றுகளெல்லாம் சாதாரணமானவை அல்ல. இவையனைத்தும் பல்லுயிர்த்தன்மைக்குப் பெயர்போன மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் இருப்பவை. நாற்றுப்பண்ணை இருக்குமிடம் வால்பாறை.

மழைக்காட்டுத் தாவரங்களைக் கொண்ட நாற்றுப்பண்ணை

பத்து வருடங்களுக்கு முன் செயலார்வம் மிக்க, காட்டுயிர் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மழைகாட்டு மீளமைப்புத்திட்டத்தை இங்கு ஆரம்பித்தது. திவ்யா முத்தப்பா, சங்கர் ராமன், ஆனந்த குமார் முதலியோர் அப்பகுதியின் பூர்வீகக் குடியினரான காடர்களில் உதவியுடன் 2000ம் ஆண்டு வால்பாறையில் இத்திட்டத்தைத் தொடங்கினர். இவர்களின் ஒரே குறிக்கோள் இப்பகுதியிலுள்ள சீரழிந்த நிலையிலுள்ள மழைக்காட்டுத்தீவுகளை அம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களை நட்டு மீளமைப்பதுதான் (Rainforest Restoration).

அது என்ன மழைக்காட்டுத்தீவு? அதற்கு முதலில் மழைக்காடுகளைப்பற்றியும் (Tropical rainforest)அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

அதிக மழையும், சூடான தட்பவெப்பமும், உயரமான மரங்களும் கொண்ட பூமத்தியரேகைப்பகுதியில் காணப்படும் காட்டுப்பகுதியே மழைக்காடுகளாகும். மழைக்காடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கப்பகுதிகளில் பரவியுள்ளது. மழைக்காடு பல்லுயிரியத்தில் மிகச்சிறந்தது. இப்பூமியின் பரப்பளவில் 2%கும் குறைவாகவே இருந்தாலும் இவ்வுலகின் 50%கும் மேற்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் தனதே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் வசிக்காத உயிரினங்கள் பலவற்றை (ஓரிட வாழிவிகள் – Endemics) இம்மழைக்காடுகளில் காணலாம்.

பூமத்திய ரேகைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் அதிக சூரிய ஒளியைப் பெற்று தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினால் இவ்வொளியைச் சக்தியாக மாற்றுகின்றன. தாவரங்களில் சேமிக்கப்பட்ட அபரிமிதமான இச்சக்தியே மழைக்காட்டிலுள்ள விலங்குகளுக்கு உணவாக அமைகிறது. அதிக உணவு இருப்பதால் அதிக விலங்குகளும் மழைக்காடுகளில் வாழ்கின்றன. இப்புவியின் உயிர்ச்சூழக்கு மழைக்காடுகளின் சேவை மிகவும் அத்தியாவசியமானது. ஏனெனில் மழைக்காடுகள் பலவிதமான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகிறது, உலகின் தட்பவெப்பநிலையை நிலைநிறுத்துகிறது, வெள்ளம், வறட்சி மற்றும் மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கிறது, பலவித மூலிகைகள் மற்றும் உணவிற்கு மூலாதாரமாக இருக்கிறது.

இப்புவிக்கும், மனிதகுலத்திற்கும் தேவையான இப்படிப்பட்ட மழைக்காடுகள் உலகில் எல்லா பகுதிகளிலும் சகட்டுமேனிக்கு அழிக்கப்பட்டன, தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இவ்விதமான மழைக்காடுகள் அடர்ந்து இருப்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், அஸ்ஸாம், அருனாசல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் தான். மழைக்காடுகளைப் பற்றி மேலும் கீழ்கண்ட உரலியில் அறியலாம்

http://hindi.mongabay.com/tamil/kids/

மழைக்காடுகள் மிகுந்திருந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தேயிலை, காப்பி போன்ற ஓரினப்பயிர்த்தோட்டங்களுக்காகவும், நீர்மின் திட்டங்களுக்காகவும், வெட்டுமரத்தொழிலுக்காகவும் கடந்த சில நூற்றாண்டுகளாக வெகுவாக திருத்தப்பட்டன. இதனால் மழைக்காடுகள் பல இடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தொடர்பற்று துண்டுதுண்டாகிப்போனது. இப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் மேற்குத்தொடர்ச்சிமலையிலுள்ள ஆனைமலைப் பகுதியில் இருக்கும்  வால்பாறை. இங்கு கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப்பசேலென தேயிலைத்தொட்டங்களைக் காணலாம். காப்பி, தேயிலை, ஏலம், யூக்கலிப்டஸ் போன்ற ஓரினத்தாவரத் தோட்டங்களின் நடுவே இவை பயிரிடத்தகுதியில்லாத இடங்களில் இன்னும் திருத்தி அமைக்கப்படாத மழைக்காடுகள் சிறியதும் பெரியதுமாக ஆங்காங்கே தீவுகளைப்போல காட்சியளிக்கும். இவையே மழைக்காட்டுத்தீவுகள் (Rainforest fragment), இங்குள்ள மக்கள் இவற்றை துண்டுச்சோலை என்றழைக்கின்றனர்.

அணையும், தேயிலைத் தோட்டமும் சூழ, மத்தியில் அமைந்திருக்கும் (இளம்பச்சை எல்லைக்கோட்டுக்குள்) மழைக்காட்டுத்தீவு. இதில் வாழும் பல உயிரினங்கள் வாழ்நாள் முழுதும் இத்துண்டுச்சோலையை விட்டு வேறெங்கும் இடம்பெயர முடியாது.

இத்துண்டுச்சோலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் வால்பாறையைச்சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகம், பரம்பிகுளம் புலிகள் காப்பகம், வாழச்சால் வனப்பகுதி, எரவிகுளம் தேசிய பூங்கா, சின்னார் சரணாலயம் போன்ற தொடர்ந்த பரந்து விரிந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் சுற்றிலும் வனத்தைக் கொண்ட வால்பாறை பகுதியிலும் பலவிதமான அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளையும், தாவரங்களையும் பார்க்க முடியும். இந்த உயிரினங்களுக்கெல்லாம் புகலிடமாக இத்துண்டுச்சோலைகள் உள்ளன. ஆகவே இந்தச் சிறிய வனப்பகுதிகளை பாதுகாப்பது இன்றியமையாதது. ஆனால் மக்கள்தொகை பெருக்கத்தால் வனச்செல்வங்கள் நாளுக்கு நாள் அருகிவரும் நிலையில் இந்த துண்டுச்சோலைகளும் அதிலிள்ள உயிரினங்களும் கூட அபாயநிலையில் உள்ளன. திருட்டு வேட்டை, வீட்டு உபயோகத்திற்காக மரங்களை வெட்டுதல், களைகள் பெருகி காட்டிலுள்ள தாவரங்களை வளரவிடாமல் தடுத்தல், ஓரினப்பயிர்களுக்காக இச்சிறிய காடுகளையும் கூடத் திருத்தி அமைத்தல், இத்துண்டுச்சோலைகளின் உள்ளேயும் ஓரமாகவும் செல்லும் சாலைகளை விரிவுபடுத்து போன்ற காரணங்களினால் இத்துண்டுச்சோலைகளும் இதில் வாழும் உயிரின்ங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகின்றன.

வால்பாறை மனித-விலங்கு மோதலுக்குப் பெயர் போன இடம். யானைத்திரள் மக்கள் குடியிருப்புகளின் அருகில் வருவதும், மதிய உணவுக்கூடங்களிலும், ரேஷன் கடைகளிலும் வைத்திருக்கும் அரிசி, பருப்பு மூட்டைகளை உட்கொள்வதும், சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்குவது போன்ற விபத்தும் அவ்வப்போது இங்கு நிகழும். வால்பாறைப் பகுதியிலுள்ள துண்டுச்சோலைகள் இல்லையெனில் இவ்வகையான மோதல்கள் பன்மடங்காகப் பெருகும் வாய்ப்புள்ளதால் இப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே அரசுசாரா நிறுவனமான இயற்கை காப்பு கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியிலுள்ள தனியார் தேயிலை மற்றும் காப்பித் தோட்ட உறிமையாளர்களான பாரி அக்ரோ, டாடா காப்பி, பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் லீவர் (தற்போதைய உரிமையாளர் – வுட் பிரையர் குரூப்) முதலிய நிறுவன அதிகாரிகளிடம் அவர்களுடைய இடங்களிலுள்ள துண்டுச்சோலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து சிதைந்துவரும் இம்மழைக்காட்டுத்தீவுகளை மீளமைக்க அனுமதி பெற்றனர்.

இந்த மழைக்காட்டு மீளமைப்புத் திட்டம் தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் காட்டுயிர் பாதுகாப்பும், ஆராய்ச்சியும் பொதுவாக அரசுக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட இடங்களில் தான் நடக்கும். ஆனால் வால்பாறை பகுதி தனியாருக்குச் செந்தமான மேலே குறிப்பிட்ட பல நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இந்நிலங்களிலேயே இத்துண்டுச்சோலைகள் அமைந்துள்ளன. இந்த மீளமைப்புப் பணியில் உதவ காட்டுயிரியலாளர்கள், ஆனைமலைப்பகுதியின் பூர்வீகக்குடியினரான காடர்களை வேலைக்குச் சேர்த்துக்கொண்டுள்ளனர். பல தனியார் நிறுவனங்களும், காட்டுயிரியலாளர்களும், உள்ளூர் மக்களும் இணைந்து பல்லுயிர் பாதுகாப்பிற்காக கூட்டு முயற்சி செய்வதாலேயே இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

அனுமதியும் இடமும் கிடைத்தாகிவிட்டது. அடுத்த கட்டமாக 800-1300 மீ உயரத்திலிருக்கும் மழைக்காட்டுப்பகுதியில் தென்படும் மரங்களின் பட்டியலை மீளமைப்புக் குழுவினர் தயார் செய்து, சாலையோரங்களில் விழுந்து கிடக்கும் அம்மரங்களின் விதைகளைச் சேகரித்து நாற்றுப்பண்ணையில் வைத்து வளர்க்க ஆரம்பித்தனர். விதைகள் முளைவிடுவதும் வேறு இடத்தில் கொண்டு சென்று நடுவதற்கான முதிர்ச்சியை அடைவது மரத்திற்கு மரம் மாறுபடும். சில மரவகைகள் முளைவிடுவதற்கே பல மாதங்கள் ஆகும். மழைக்காட்டு மர விதைகளை தினமும் தண்ணிர் ஊற்றி, இயற்கை உரமிட்டு பூச்சிகளிடமிருந்தும், கொறிக்கும் எலிகளிடமிருந்தும் காப்பாற்றி பிள்ளைகள் போல வளர்க்கப்படுகிறது. பாதுகாப்பாகவும், மிகுந்த கவனத்துடனும் வளர்க்கப்பட்ட இந்நாற்றுகள் 3-4 ஆண்டுகள் கழித்து தென்மேற்குப்பருவ மழைக்காலங்களில்தான் பண்ணையை விட்டு  துண்டுச்சோலைகளில் கொண்டு சென்று நடப்படுகின்றன. கொட்டும் மழையில், மலைச்சரிவுகளில், அட்டைகள் இரத்தம் உறிய குழி தோண்டி, அக்குழியில் சிறிது இயற்கை உரமிட்டு, உறைகளில் அடைபட்டிருந்த வேர்களைக்கொண்ட மழைக்காட்டு மர நாற்று அது இருக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்க்கிறார்கள் இம்மீளமைப்புக் குழுவினர்.

மழைக்காட்டு நாற்று நடும் நடும் Dr. ஆனந்தகுமார்.

நம் ஊர்களில் நடக்கும் மரம் நடும் விழாக்களில் சம்பிரதாயத்திற்கு நினைத்த இடத்தில் ஒரு மரத்தை நட்டுவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு அதன்பின் அதை திரும்பிக்கூட பார்க்கமாட்டோம். ஆனால் இது அப்படியல்ல. எந்த இடத்தில் எவ்வகையான மரங்களை நடுவது என்பது முன்பே தீர்மானிக்கப்படுகிறது (மலையின் உயரத்திற்கு ஏற்றாற்போல் அவ்வுயரத்திலிருக்கும் தாவர வகையும் மாறுபடும்). நடுவதற்கு முன் அவ்விடங்களில் களைச்செடிகள் அகற்றப்படுகின்றன. துண்டுச்சோலை அதிகமாக சிதைக்கப்பட்டிருந்தால் அதற்குத் தகுந்தவாறு அதன் ஓரங்களில் வெட்டவெளியில் வளரும் மரவகைகளும், மூடிய விதானத்தினுள்ளே நிழலின் கீழ் வளரும் மரங்களும் நடப்படுகிறது. நட்டுவைக்கப்படும் ஒவ்வொரு நாற்றிலும் அடையாளத்திற்காக பளிச்சென்று தெரியும் நிறத்தில் சிறிய பிளாஸ்டிக் பட்டைகள் கட்டிவைக்கப்படுகின்றன. இதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் நடப்பட்ட மொத்த நாற்றுகளில் எத்தனை உயிர்பிழைக்கின்றன எப்பது கணக்கிடப்படுகிறது. நாற்றுகளை நட்டபின் அவ்வப்போது இடத்திற்குத் தகுந்தாற் போல் அப்பகுதியில் வளரும் களைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இது நட்டுவைக்கப்பட்ட மழைக்காட்டு நாற்று வளர ஏதுசெய்கிறது. ஓரளவிற்கு இந்நாற்றுகள் வளர்ந்தபின் அவற்றின் நிழலுக்கடியில் களைகள் வளராது.

கடந்த 12 ஆண்டுகளாக வால்பாறைப் பகுதியில் மொத்தம் சுமார் 50 ஹெக்டேர் பரப்பில் கிட்டத்தட்ட 50,000 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இவையணைத்தும் ஒரே வகையானவை அல்ல. மழைக்காட்டில் வளரும் மரங்கள், பெருங்கொடிகள், பிரம்பு என சுமார் 150 வகையான தாவரங்களை சிதைந்துபோன மழைக்காட்டுத் துண்டுச்சோலையிலும், காப்பித்தோட்டங்களுக்கு நிழல் மரமாகவும் நடப்பட்டுள்ளன. வனத்திலுள்ள ஒரு மரத்தை வெட்டிச்சாய்க்க எத்தனை மணிநேரங்கள் ஆகும்? 50 ஹெக்டேர் பரப்புள்ள வனத்தை அழிக்க எவ்வளவு நாளாகும்?  ஆனால் ஒரு விதையை முளைக்க வைத்து வளர்த்து ஆளாக்கி அதனிடத்தில் கொண்டு சேர்த்து, கவனமாக பராமரித்து பாதுகாத்த பின் அம்மரம் அடைந்த உயரம் எவ்வளவு தெரியுமா? சுமார் 10 லிருந்து 15 மீட்டர். இதற்கு 12 ஆண்டுகள் பிடிக்கிறது!

மீளமைக்கப்பட்ட ஒரு மழைக்காட்டுப் பகுதி.
மழைக்காட்டு நாற்றுகளை நடும் முன்னும் (இடது) மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் (வலது).

ஒரு மழைக்காட்டு மர விதை முளைத்து, துளிர் விட்டு, நாற்றாகி, மரமாக உயர்ந்து வளர்வதற்குள் பல விதமான இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது. வறட்சியிலிருந்தும், நாம் காட்டுக்குள் கொண்டு செல்லும் ஆடு, மாடுகளிடமிருந்தும், அங்கு வாழும் தாவர உண்ணிகளிடமிருந்தும், சூரிய ஒளிக்காக, நீருக்காக அதனைச்சுற்றியுள்ள தாவரங்களிடமிருந்தும், களைச்செடிகளிடமிருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக மரவெட்டியின் கோடாலியிடமிருந்தும் தப்பிக்க வேண்டும்.

கிருஷ்ணாவும், இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் மழைக்காட்டு மீளமைப்புத் திட்டக் குழுவினரும், இந்த மழைக்காட்டு மரங்களின் நெடுந்தூரப் பயணத்தை தொடங்கி மட்டுமே வைத்துக்கொண்டிருக்கின்றனர். எந்த ஒரு பயணத்திற்கும் முக்கியமானது நாம் எடுத்து வைக்கும் முதல் படிதானே. சேர வேண்டிய இடத்தை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்தானே பயணத்தைத் தொடங்குகிறோம். அதைப்போலவே இவர்களும், தாம் நட்டுவைக்கும் இம்மரங்கள் தழைத்து, பிற்காலத்தில் வானை முட்டும் அளவிற்கு நெடுந்துயர்ந்து, இங்கு திரியும் பெரிய இருவாசிகளுக்கும், பழுப்பு மரநாய்களுக்கும் பழங்களை அளித்து இவை இம்மரங்களின் விதைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரப்பி காட்டினைச் செழிக்கச்செய்யும் என நம்புகிறார்கள். நம்பிக்கைத்தானே வாழ்க்கையே!

11th March 2012 அன்று தினமணி நாளிதழின் “கொண்டாட்டம்” ஞாயிறு இணைப்பில் வெளியான கட்டுரை இது. அக்கட்டுரைக்கான உரலி இதோ:

http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article888141.ece

மேற்குத்தொடர்ச்சி மலையின் மழைக்காடுகளை மீளமைக்கும் வழிமுறைகளை விளக்கும் ஒரு சிறு நூலை இங்கு காணலாம் (PDF).

மேலும் விவரங்களுக்கு, இயற்கை காப்புக் கழகத்தின் (NCF) மழைகாட்டு மீளமைப்புத் திட்டதினை விளக்கும் இணையத்தளத்தினைக் ( http://www.ncf-india.org/restoration/) காணவும்.

மழைக்காட்டு மீளமைப்புத் திட்டத்தினைப் பற்றிய குறும்படத்தை இங்கே காணலாம்.

http://www.youtube.com/watch?v=lPGD0YgvHKA

தட்டாம்பூச்சி பார்க்கலாம் வாங்க…

தட்டாம்பூச்சி பார்க்கலாம் வாங்க…

தட்டானைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. சில வேளைகளில் இரவு நேரத்தில் அவை நமது வீட்டுக்குள் புகுந்து மின்விளக்குகளைச் சுற்றி வட்டமிட்டுப் பறந்து, பின்னர் பல்லிக்கு இரையாவதையும் பார்த்திருப்போம். நம்மில் பலர் சிறு வயதில் அதைப் பிடித்து விளையாடியும் இருப்போம். அப்படிச் செய்யாமல் சற்றுநேரம் அவற்றை உற்றுநேக்குங்கள். அவற்றின் செயல்பாடுகள் மிகவும் அலாதியாகவும், பிரமிக்கத்தக்க வகையிலும், ஆச்சர்யமூட்டும் வகையிலும் இருக்கும்.

இவ்வுலகில் நாம் தோன்றுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வானில் பறந்து கொண்டிருப்பவை தட்டான்கள். திறமையாக  பறக்கக்கூடிய பூச்சிகளில் முதலிடம் வகிப்பது தட்டான்களே! உலகில் சுமார் 6000 வகை தட்டான்கள் உள்ளன. அதில் 536 வகைத் தட்டான்கள் இந்தியாவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

வானில் சுதந்திரமாக பறக்கும் ஒரு தட்டான்
வானில் சுதந்திரமாக பறக்கும் ஒரு தட்டான்

தாட்டானும் ஊசித்தட்டானும்

தட்டான் என்பது வழக்குச் சொல். சங்க இலக்கியங்களில் இவை தும்பி என்றழைக்கப்பட்டுள்ளன. தட்டான்கள் இரண்டு வகைப்படும். அமரும்போது இறக்கையை பக்கவாட்டில் விரித்து வைத்திருப்பவை தட்டான்கள். இவற்றின் கண்கள் அருகருகே அமைந்திருக்கும். இறக்கையை மடக்கி முதுகின் மேல் வைத்திருப்பவை ஊசித்தட்டான்கள். இவை தட்டான்களைவிட பெரும்பாலும் உருவத்தில் சிறியதாகவும், ஒல்லியான உடலையும் கொண்டிருக்கும். இவற்றின் இரண்டு கண்களும் இடைவெளி விட்டு அமைந்திருக்கும். தட்டான்கள் பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகிலும், திறந்த வெளிகளிலும் பறந்து திரியும். ஆனால் ஊசித்தட்டான்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகிலேயேதான் இருக்கும்.

ஊசித்தட்டான் - மூடிய இறக்கைகள், கண்கள் இடைவெளியுடன். தட்டான் - இறக்கைகள் விரிந்த நிலையில், அருகமைந்த கண்கள்
பெரும்பாலான ஊசித்தட்டான்கள் அமரும்போது இறக்கைகளை முதுகின் மேல் மடக்கி வைத்திருக்கும். தட்டானின் இறக்கைகள் அமர்ந்திருக்கும் போது விரிந்த நிலையில் இருக்கும்

உருவத்தில் வேறுபட்டிருந்தாலும் இவற்றின் வாழ்க்கைமுறை ஏறக்குறைய ஒன்றுதான். தட்டானுக்கும், ஊசித்தட்டானுக்கும் நீர்நிலைகளே உலகம். இவை முட்டையிடுவது நீரில்தான், பின் பல மாதங்கள் அல்லது வருடக்கணக்கில் இதன் லார்வா நீருக்கடியில் வாழ்கிறது. இப்ருவத்தில் இவை நீரிலுள்ள பூச்சிகள், கொசுவின் லார்வா, தலைப்பிரட்டை (தவளையின் குஞ்சு), சிறிய மீன்கள் போன்றவற்றை பிடித்து சாப்பிடுகின்றன.

தட்டானின் இளம்பருவம் (லார்வா)
தட்டானின் இளம்பருவம் (லார்வா)

பல்வேறு லார்வாப் பருவங்களின் முடிவில் வரும் இன்ஸ்டார் பருவத்தில் இவை நீருக்கு அருகிலுள்ள செடிகளில், பாறைகளில் அல்லது நீரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் குச்சிகளில் மேல் நேக்கி மெல்ல நகர்ந்து தமது மேலுறையை கிழித்துக்கொண்டு உள்ளிருந்து முதிர்ந்த தட்டானாக வெளியே வருகின்றன. பின்பு மெதுவாக இறக்கைகளை விரித்து காற்றில் பறந்து செல்கின்றன. இந்த வியத்தகு காட்சியைக் காண இந்த படத்தைப் பாருங்கள்: தட்டான் பிறக்கும் காட்சி

ARKive video - Emperor dragonfly adult emerging from nymph
(நன்றி: www.arkive.org)  

உயிருள்ள ஹெலிகாப்டர்

பூச்சி இனங்களிலேயே முதன்முதலில் பறக்கும் திறனைப் பெற்றவை தட்டான்களாகவே இருந்திருக்க வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் யூகம். இவற்றின் பறக்கும் திறன் நம்மை வியப்பில் ஆழ்த்தும். தட்டானுடைய முதுகின் மேற்புறம் நான்கு இறக்கைகள் தனித்தனியாக அசையும் வகையில்  உறுதியான தசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும். தட்டான்களால் விரைவாக முன்னோக்கி மட்டுமல்லாமல் தலையைத் திருப்பாமலேயே பின்னோக்கிப் பறக்கவும், இருந்த இடத்திலிருந்து நிலை மாறாமல் மேலும் கீழும் மட்டுமில்லாமல், சட்டென 3600 சுழன்று திரும்பவும் அவற்றால் முடியும். பறவையைக் கண்டு விமானத்தை மனிதன் கண்டுபிடித்ததைப் போல, ஹெலிகாப்டர் தயாரிப்பதற்கான எண்ணம் பிறந்தது தட்டானைப் பார்த்துத்தான்.

பறக்கும் ஊசித்தட்டான்
பறக்கும் ஊசித்தட்டான்

அழகிய உடல்

தட்டானின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அமைந்துள்ளன. இதன் உடலை மூன்று பாகங்களாக பிரிக்கலாம். தலை, மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதி (வால் என்று நாம் நினைப்பது அதன் வயிற்றுப்பகுதியே!). தலையில் இரண்டு கண்கள் உண்டு. இவை சாதாரண கண்கள் அல்ல, கூட்டுக்கண்கள். அதாவது ஒவ்வொரு கண்ணிலும் ஆயிரக்கணக்கான விழியாடிகள் (லென்ஸ்) உள்ளன. இவற்றுக்கு ஒம்மடீடியங்கள் என்று பெயர் (ommotidium). இதன் மூலம் எல்லா திசைகளிலும் நடக்கும் விஷயங்களை பார்க்க முடியும். மார்புப் பகுதியின் மேல் இறக்கைகளும், கீழே ஆறு கால்களும் இருக்கும், வயிற்றுப் பகுதியின் முனையில் இனப்பெருக்க நீட்சிகள் இருக்கும்.

தட்டானின் தலையிலுள்ள கூட்டுக்கண்கள்
தட்டானின் தலையிலுள்ள கூட்டுக்கண்கள்

இவற்றின் உடல் மற்றும் இறக்கையின் நிறத்தை வைத்து இனம் பிரித்து அறியலாம். சில ஊசித்தட்டான்களின் இறக்கையில் இருக்கும் நிறங்கள் சூரிய ஒளியில் தகதகவென மின்னும் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆணின் இறக்கையிலேயே இத்தகைய நிறங்கள் இருக்கும். பெண் தட்டான்களை கவர்வதற்கும், எதிரிகளை எச்சரிப்பதற்காகும் இவை பயன்படுகின்றன.

எங்கு பார்க்கலாம்?

எல்லாம் சரி, தட்டான்களை எங்கே பார்க்கலாம்? கொஞ்சம் ஜாக்கிரதையாக உற்றுப்பாருங்கள். நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் அவை இருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும். நீங்கள் நகரத்தில் வசிக்கிறீர்களா? உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள மைதானங்கள், நீர்நிலைகள் கொண்ட பூங்காக்கள், புல்வெளிகள், ஓடைகள், ஏன் சாக்கடைகளில்கூட தட்டான்களைப் பார்க்கலாம். வயல்வெளி, குளங்கள், ஓடைகள் போன்றவை தட்டான்களின் சொர்க்கம். நல்ல வெயில் அடிக்கும் நாள்கள்தான் அவற்றை எளிதில் பார்ப்பதற்கான நல்ல நேரம். அவசரப்படாமல் நிதானமாக நகர்ந்து சென்றால், தட்டான்களை மிக அருகில் நெருங்கிச் சென்று, பார்த்து ரசிக்க முடியும். உங்களது செல்போனில் உள்ள கேமராவில்கூட, இந்த அழகான பூச்சிகளை படமும் எடுக்க முடியும்.

சரி, தட்டான்பூச்சிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டோம். எப்படி வெவ்வேறு தட்டான்பூச்சி வகைகளை பிரித்து அறிந்து கொள்வது? அதற்கு உதவும் வகையில் கே.ஏ.சுப்பிரமணியம் எழுதியுள்ள “டிராகன்ஃபிளைஸ் ஆஃப் இந்தியா” (Dragonflies of India) என்ற புத்தகம் உதவும். பல்வேறு தட்டான்பூச்சிகளை பிரித்து அறிவதற்கான விவரங்கள், அவற்றின் பழக்கவழக்கங்கள், வாழிடங்கள் போன்றவற்றை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகத்தில் இந்தியாவில் தென்படும் 111 தட்டான்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. விஞ்ஞான் பிரசார் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் தட்டான்பூச்சிகளின் வண்ணப் படங்களும் தரப்பட்டுள்ளன.

தட்டான் மனிதர்களுக்கு நன்மை செய்யும் பூச்சி. நீருக்கடியில் இருக்கும்போது பெரும்பாலும் கொசுவின் லார்வாவை சாப்பிடுகிறது. நீரை விட்டு வெளியேறி முதிர்ந்த நிலையில் வானில் பறந்து திரியும் வேளையிலும் கொசு மற்றும் தீமை பயக்கும் பூச்சிகளை உணவாகக் கொள்கிறது. இவை பறந்து திரியும் காலம் எவ்வளவு தெரியுமா? சில நாள்களிலிருந்து ஒரு சில மாதங்கள் வரைதான். இந்த அழகிய, விசித்திரமான, நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளை பிடித்து துன்புறுத்தாமல், பார்த்து ரசித்து இன்புறுவோம்.

இந்தக் கட்டுரை Tamilnadu Science Forum (TNSF) வெளியிடும் துளிர் எனும் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழில் (ஜனவரி 2012) வெளியானது. இக்கட்டுரையை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம். துளிர் – தட்டான்கள் ஜனவரி 2012

Edited version of this article on Odonates published in ‘Thulir’ – a science monthly magazine for kids from Tamilnadu Science Forum (TNSF). You can download the PDF of this Tamil article here.

வேழங்களை வாழவைக்க….

வேழங்களை வாழவைக்க….

காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்பட, யானைகளின் வீடுகளும் வாழ்க்கையும் வேகமாக அழிந்து வருகின்றன. இவ்வேழங்களை வாழவைக்க நாம்  செய்ய வேண்டியது என்ன?

Elephant
அழிவின் விளிம்பில் ஆசிய யானை (Photo: Ganesh Raghunathan)

யானைக்கூட்டத்தை காட்டில் பார்ப்பது எவ்வளவு இனிமையான காட்சியாக இருக்கிறது! அதுவும் நீளமாக தந்தம் கொண்ட ஆண் யானையின் கம்பீரம் நம்மை வியக்க வைக்கிறது. பழக்கப்பட்ட யானை வீதியில் வரும்போது அதன் மேலே ஏறி பவனி வர செய்ய பலருக்கு ஆவலாயிருக்கும், நாம் கொடுக்கும் பழத்தையோ காசையோ தனது ஈரமான துதிக்கை முனையில் வாங்கி பெருமூச்சுடன் தலையில் சொல்லிக் கொடுத்தவாறு நம்மை ஆசீர்வதிக்கும் போது நமக்கு சிலிர்த்துப்போகுமல்லவா? கால்களில் சங்கிலியைக்கட்டி நமக்காக மரமிழுக்கும்போது கண்களில் நீர் வழிந்தாலும் முகத்தில் புன்னகையுடன் இருக்கும் யானைகளைப் பார்க்கும் போதெல்லாம் நாம் அவற்றிற்காக பரிதாப்படுகிறோம். யானைகளை விநாயகராகவும், கணபதியாகவும் உருவகித்து வழிபடுகிறோம். அதே சமயம் மனிதர்களாகிய நாம் தந்தத்திற்காக அவற்றை கொடூரமாக கொல்லவும் செய்கிறோம், மாதக்கணக்கில் அரும்பாடுபட்டு வளர்த்த பயிரை ஒரே இரவில் தின்று தீர்க்கும் யானைக்கூட்டத்தை கொல்லத்துடிக்கிறோம். ஒருபுறம் வணங்கவும் மறுபுறம் தூற்றவை செய்கிறோம். ஏனிந்த முரண்பாடு?

Mustigudi
நாம் வழிபடும் ஆனைமுகத்தோன் (Photo: Kalyan Varma)

யானைத்திரளை தூரத்தில் இருந்து பார்த்து ரசிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம். அவை இலாவகமான இலை, தழைகளை தமது துதிக்கையால் பிடித்துச்  சாப்பிடுவதும், கூடி விளையாடுவதும், அளவளாவுவதும், தங்கள் குட்டிகளை அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் விதத்தை நேரில் காண்பதே மிக சுவாரசியமானது.. உணர்வுப்பூர்வமான நெருக்கம், சமூக பழக்கவழக்கங்கள், ஒரு யானை துன்பத்திலிருக்கும் போது மற்றொன்று அதைப் பார்த்து பச்சாதாபப்படுவது என்று மனித உணர்வுகளுக்கும் யானைகளின் உணர்வுகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் நமக்கு ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் இருக்கின்றன.. அதேநேரம் அவை நமது வயல்களுக்குள் நுழைந்தாலோ, பல காலம் பணத்தையும் ஆற்றலையும் செலவழித்து நாம் உருவாக்கிய பயிர்களை அழித்தாலோ, கருணையின்றி மனிதர்களை மிதித்தாலோ, கொன்றாலோ நாம் அவற்றைக் கண்டு அஞ்சுகிறோம், வெறுக்கவும் செய்கிறோம். ஆனால் அவை ஏன் இப்படி நடந்து கொள்கின்றன என்று என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

உண்மைதான், யானை – மனிதர்கள் இடையிலான மோதல் சம்பவங்கள் வருத்தம் தருபவைதான். ஆனால் அதேநேரம் நாம் யானைகளுக்கு எதிராக நாம் இதுவரை செய்த தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளைப் பற்றி ஆறறிவுடைய நாம் உணர்ந்திருக்கிறோமா?

யானைகளின் வீடுகளான காடுகளும் புல்வெளிகளும் நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றன. யானைகள் பொதுவாகவே காட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இரை தேடப் போவது வழக்கம். இதற்காக யானைகள் பன்னெடுங் காலமாக பயன்படுத்தி வரும் வழித்தடங்களில் (elephant corridor) அணைக்கட்டுகள், ரயில் பாதைகள், சாலைகள், பிரமாண்டமான தண்ணீர் குழாய்கள், மனிதக் குடியிருப்புகள் போன்றவை பெருகிவிட்டன. இன்றைக்கு இந்த யானை வழித்தடங்கள் யாவும் ஆக்கிரமிப்புகள், தடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளன.

Road block
யானையின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் (Photo: Kalyan Varma)

மக்கள்தொகை தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருப்பதால், மேலும் மேலும் காடுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. யானைகளின் வீடுகளான காடுகள் ஒருபுறம் அழிந்து கொண்டிருக்கும் நிலையில், எஞ்சியுள்ள காடுகளும் சீரழிந்து கொண்டே செல்லும் நிலையில்தான் மனிதர்கள் – யானைகள் இடையிலான மோதல் வலுக்கச்செய்கிறது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையில் மனிதர்கள் யானைகளைக் கொல்வதும், யானைகள் மனிதர்களைக் கொல்வதும் நடக்கிறது. அது மட்டுமில்லாமல் யானைகளுக்கு இன்றியமையாத அடிப்படைத்தேவையான ஆதாரங்களான உணவு நிழல் தரும் பெரிய மரங்கள் கொண்ட வனம் யாவும்  அற்றுப்போய்க்கொண்டிருக்கின்றன . தேயிலை, காப்பி, ரப்பர், ஏலக்காய் உள்ளிட்ட ஓரினப்பயிர்களை வளர்ப்பதற்காக காடுகள் துண்டு துண்டாக்கப்பட்டதும், சீரழிந்து போனதுமே இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். யானைகளுக்குத் தேவையான உணவும், அவற்றை தேடிச் சென்றடைய யானைகள் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த வழித்தடங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், நமது பாரம்பரியம், காடுகளுடைய வளத்தின் அடையாளமாக இருக்கும் யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

யானை வழித்தடங்கள் மட்டுமல்ல, யானைகளின் எண்ணிக்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆண் யானைகளுக்கு உள்ள கவர்ச்சிகரமான தந்தம் காரணமாக, அவை கொடூரமாகக் கொல்லப்படுவதால் ஆண் – பெண் விகிதம் பாதிக்கப்படுகிறது. பயிர்களை சேதம் செய்யலாம் என்று நினைத்து மின்சாரம் பாய்ச்சப்பட்டோ, விஷம் வைக்கப்பட்டோ, அல்லது வேகமாக ஓடும் ரயிலில் அடிபட்டோ யானைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் வயது முதிர்ந்த ஒரு பெண் யானை இறந்து போகும்போது, அந்தக் குடும்பம் தங்களது தலைவியை இழக்கிறது. இதன் காரணமாக அந்த யானைக் கூட்டம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாட நேர்கிறது. இது சிலவேளைகளில் அந்த யானைக் குடும்பமே சிதறி வெவ்வேறு பாதைகளில் பிரிந்து செல்ல ஏதுவாகிறது. அது மட்டுமில்லாமல் சர்க்கஸில் வித்தை காட்டுவதற்காகவோ, கோவில்களில் சேவை செய்வதற்காகவோ யானைகள் பிடிக்கப்பட்டோ, கடத்தியோகொண்டு வரப்படும் போது அவை குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்டு நிராதரவாகின்றன. அவற்றின் வீடான காடுகள் துண்டாக்கப்படும் போது, உறவினர்களுடனான நெருக்கமான தொடர்பை அவை இழக்கின்றன. அவை வாழும் காட்டிலேயே அகதியாக மாற்றப்படுகின்றன.

Elephant and calf
யானைகளும் நம்மைப் போல சமூக விலங்குகள்தான். (Photo: Kalyan Varma)

நமது சமூகத்தைச் சேர்ந்த  ஒருவர் கொல்லப்பட்டால் நாம் மனமுடைந்து போராட்டத்தில் குதிக்கிறோம். நீதி கேட்கிறோம். எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் நமது ஆதரவை அவர்களுக்குத் தருகிறோம். ஏன்?அவர்களின் வலியை நாமும் உணர்வதால்தான். யானைகளும் நம்மைப் போன்ற சமூக விலங்குகள்தான். அவை தங்களது குட்டிகளை அக்கறையுடனும், உறவினர்களை நம்மைப் போலவே நெருக்கமாகவும் நடத்துகின்றன. யானைகளை வெறும் உணர்ச்சியற்ற பொருள்களாகப் பார்ப்பது தவறு என்று அவற்றை ஆராய்ச்சி செய்த உயிரியலாளர்களும், யானை ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர். அவை நம்மைப் போலவே உணர்ச்சி மிகுந்த விலங்குகள், நம்மைப் போலவே சமூகமாக வாழ்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யானைகளின் தேவைகளையும், அவற்றின் வலிகளையும் நாம் புரிந்துகொள்ளாத வரை, யானைகளை பாதுகாப்பது என்பது மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கும்.

யானைகளை பாதுகாக்க மத்திய அரசு யானைகளை தேசிய பாரம்பரிய விலங்காக அங்கீகரித்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் யானைகள் செயல்திட்ட அமைப்பை உருவாக்கியுள்ளது. அரசுடன் மக்களான நாமும் இணைந்து செயல்பட்டால்தான் யானைகளைக் காப்பாற்ற முடியும். அதற்கு தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவை என்று அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது (Elephant Task Force Report). யானைகளை பாதுகாப்பதற்காக அந்த அமைப்பு வழங்கியுள்ள முக்கியமான சில பரிந்துரைகள்:

 • யானை வழித்தடங்களை மாற்றும் செயல்பாடுகளை தடை செய்ய வேண்டும்.
 • யானைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்த வேண்டும்.
 • ஒவ்வொரு யானைப் பாதுகாப்பிடங்களிலும் உள்ளூர் நிர்வாகக் குழுக்களை அமைக்க வேண்டும்.
 • யானைகள் வாழும் சூழலியல், அவற்றின் எண்ணிக்கை பற்றி அறிய தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
 • திருட்டுத்தனமாக நடக்கும் யானைத் தந்த வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 • பழக்கப்பட்ட யானைகள் மீதான கவனமும் நிர்வாகமும் மேம்படுத்தப்பட வேண்டும்.
 • அதிக மனித – விலங்கு மோதல் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 • இந்த மோதலில் இழக்கப்படும் பயிர்களுக்குசெலவிட்ட முழுத்தொகையையும் நிவாரண நிதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்திடல் வேண்டும்.
 • யானைகளின் முக்கியத்துவம், மதிப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
Elephant eye
யானையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவது அவசியம் (Photo: Kalyan Varma)

யானைகளைப் பாதுகாக்க ம்மால் என்ன செய்ய முடியும்:

 • யானையைக் கொன்று பெறப்பட்ட அதனது உடல்பாகங்களை (உரோமம் மற்றும் தந்தம்) அல்லது அவற்றாலான ஆபரணங்ளை வாங்குவதைத் தவிர்க்கலாம்.
 • யானை வாழும் பகுதியிலிருந்து வெட்டி வரப்பட்ட மரங்களாலான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம்.
 • யானை ஆராய்ச்சி செய்யும் மையங்களுக்கு நம்மாலான தொண்டு செய்யலாம்.
 • யானைகளின், அவற்றின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களின்  முக்கியத்துவத்தையும் பிறருக்கு உணரவைக்க முயற்சி செய்யலாம்.

இந்தக் கட்டுரை Tamilnadu Science Forum (TNSF) வெளியிடும் துளிர் எனும் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழில் (October 2011) வெளியானது. இக்கட்டுரையை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்(PDF).

Edited version of this article on Asian Elephants published in ‘Thulir’ – a science monthly magazine for kids from Tamilnadu Science Forum (TNSF). You can download the PDF of this Tamil article here.

This is a Tamil Version of article titled “Trumpeting their Cause” published in The Hindu Young World on 18th July, 2011.